பேய், பில்லி, சூனியம், பழி வாங்குதல் வகையறா படங்களில் இது பழிவாங்கும் த்ரில்லர் படமாக வந்திருக்கிறது.யஸ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ் நான்கு பேரும் ஐ.டி.கம்பெனியில் ஒன்றாக வேலை செய்யும் நண்பர்கள்.
இவர்களில் மனோஜ் திடீரென்று ஒருநாள் ஆபீஸ் லிப்ட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து போகிறான்.
இதனால் அதிர்ச்சியடையும் நண்பர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீஸ் அவர்களையே சந்தேகப்படுகிறது. அப்போதே ஷாம் மற்றும் பிரதீப் பாலாஜி ஆகியோரும் அடுத்தடுத்து மர்மான முறையில் இறக்கிறார்கள். அதில் ஒருவன் மீது மட்டும் சந்தேகம் அதிகமாக, அவன் போலீசுக்குப் பயந்து ஓட மடக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய் விசாரிக்க ஆரம்பிக்கும் போது ப்ளாஸ்பேக் விரிகிறது.
அதில் யஸ்மித்தின் காதலியான ஹீரோயின் அதே ஐ.டி கம்பெனியில் நன்றாக வேலைபார்த்து பதவி உயர்வு பெறுவது பிடிக்காமல் சக நண்பர்கள் செய்யும் சதிதான் காரணம் என்று தெரியவர அப்போதே கொலைகளுக்கான காரணமும் தெரிய வருகிறது. அது என்ன? எப்படி நண்பர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்? யார் அந்த கொலைகளை செய்வது என்பதெல்லாம் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறார் இயக்குனர் கமல்.
ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் யஸ்மித் ஒரு ரொமான்ஸ் ஹீரோவுக்கான முகமாக இருந்தாலும், ஆக்ஷன் படங்களுக்கும் ஏற்ற ஆள் போல இருக்கிறார். முதல் படம் என்கிற அடையாளம் இல்லாமல் இயல்பாக நடித்திருந்தாலும் அந்த திறமையை வெளிக்காட்டும் காட்சிகள் குறைவு என்பது மட்டுமே குறை. மற்றபடி அவர் ஹீரோவாக ஜெயிப்பதற்கான எல்லா தகுதிகளையும் நடிப்பில் பார்க்க முடிகிறது.
நண்பர்களாக வரும் சித்து, ஷாம் பிரதீப் பாலாஜி, மனோஜ் ஆகியோர் நடிக்காமல் நான்கு நண்பர்கள் நிஜத்தில் பேசிக்கொண்டால் எப்படி இருக்குமோ அதேபோல நடித்திருக்கிறார்கள்.
ஹீரோயின் சாக்ஷி அகர்வால் தான் படத்தில் ஆவியாக வருகிறார். ஆனாலும் இடைவேளை வரை அவருடைய முகமே தெரிவதில்லை. இடைவேளைக்குப் பின்பு ப்ளாஸ்பேக் காட்சிகளில் தான் அவரை ரசிக்க முடிகிறது. ஆள் பார்ப்பதற்கு கொழு கொழுவென்று இருந்தாலும் முகத்தில் அட்ராக்ஷன் கொஞ்சம் குறைவு தான். முதல் படத்திலேயே டூயட் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.
ஐ.டி. கம்பெனியில் நடக்கும் போட்டி, பொறாமைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனையை கதையாக்கி அதை படமாக தந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கமல் குமார். பெரும்பாலான காட்சிகள் ஹீரோ மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளிலேயே நடப்பதால் வழக்கமாக பேய் படங்களில் பார்க்கும் காட்சிகளைப் போல பெரும் சலிப்பைத் தருகிறது.
ரஷாந்த் அர்வின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசை மட்டும் ஓ.கே ரகம்.
எடிட்டிங்கில் அதிக கவனம் செலுத்திய கமல் திரைக்கதையை விறுவிறுப்பாக்குவதிலும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
பொதுவாக பேய்ப்படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருக்கும். அதை வைத்துத்தான் ரசிகர்களை பயமுறுத்துவார்கள். ஆனால் இதில் அந்த மாதிரியான செயற்கையாக இல்லாமல் ஹீரோயினுக்கு மேக்கப் போட்டு அதன் மூலமாகவே ரசிகர்களை பயமுறுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் கமல். அது நன்றாகவே ‘ஒர்க்-அவுட்’ ஆகியிருக்கிறது.
ஆக ‘யூகன்’ ஒரு ‘பட்ஜெட் பேய்’ என்பது திரையில் அப்பட்டமாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment